Saturday, September 5, 2015

EN PAAVAM THEERTHA NAALAIYE

1. என் பாவம் தீர்ந்த நாளையே
அன்போடு எண்ணி ஜீவிப்பேன்
அந்நாளில் பெற்ற ஈவையே
சந்தோஷமாய்க் கொண்டாடுவேன்

பல்லவி

இன்ப நாள்! இன்ப நாள்!
என் பாவம் தீர்ந்து போன நாள்!
பேரன்பர் என்னை ரட்சித்தார்
சீராக்கி இன்பம் நல்கினார்
இன்ப நாள்! இன்ப நாள்!
என் பாவம் தீர்ந்து போன நாள்!
2. இம்மானுவேல் இப்பாவியைத்
தம் சொந்தமாக்கிக் கொண்டனர்
சந்தேகம் நீக்கி மன்னிப்பைத்
தந்தென்னை அன்பாய் சேர்த்தனர்

3. என் உள்ளமே உன் மீட்பரை
என்றைக்கும் சார்ந்து வாழுவாய்
ஆருயிர் தந்த நாதரை
ஓர்காலும் விட்டு நீங்கிடாய்

4. ஆட்கொண்ட நாதா! எந்தனை
நாடோறும் தத்தம் செய்குவேன்
பின் மோட்ச வீட்டில் பேரன்பை
இன்னோசையாலே பாடுவேன்

ISRAVELIN DEVANAI YESU RAJAN BAALAGANAI

இஸ்ரவேலின் தேவனை இயேசு இராஜன் பாலகனை
துதிபாடுவோம் அவரை வாழ்த்தி துதிமலர் தூவிடுவோம்

Merry Merry Christmas
Happy Happy Happy Christmas - 2

1. இருளின் அதிகாரத்தினால் நாம்
அடிமைகளாயிருந்தோம்
அன்பின் குமாரன் தியாகத்தினால்
நாம் விடுதலையாக்கப்பட்டோம்
தம் அன்பின் ஜனத்திரளாக
நம்மை சேர்த்துக்கொண்டாரே
பாவ மன்னிப்பு மீட்பு எல்லாமே
அன்பின் இலவச பரிசாக அளித்தாரே

2. சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர்
திருச்சபையின் தலையானார்
சகல பரிபூரணமும்
அவருக்குள் வாசமாகும்
ஆதியும் தற்சொரூபமும் அவரே
சமாதானம் தருபவரே
பூலோகம் மேலோகம் யாவுமே
ஒன்றாய் இணைந்தே வாழ்ந்திடும் சீக்கிரமே

ENNA BAKKIYAM YEVARKUNDU INTHA SILAKIYAM

என்ன பாக்கியம், எவர்க்குண்டு
இந்தச் சிலாக்கியம்?

அனுபல்லவி

விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,
மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் --- என்ன

சரணங்கள்

1. வானகந் தானோ - அல்லதிது – வையகந் தானோ?
ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்
கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது --- என்ன

2. சாமியைக் கண்டேன் - மகானந்தம் - சாலவுங்கொண்டேன்,
காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,
கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும் --- என்ன

3. அன்னமும் நீயே - கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;
மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?
மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ? --- என்ன

4. போதும் இவ்வாழ்வு - பரகதி - போவேன் இப்போது;
ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;
எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது --- என்ன

ENNA SUGAM AHAHA ENNA SUGAM

என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்
என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம்
பரமானந்த மோட்ச சுகானந்தம்
அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம்

சரணங்கள்

1. பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம் (2)
கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம் --- என்ன சுகம்

2. வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம் (2)
சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம் --- என்ன சுகம்

3. ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம் (2)
ஜீவ விருஷக் கனியைப் புசிக்கலாம் --- என்ன சுகம்

4. தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம் (2)
சிங்காசனத்தினின்று ஜெயகீதம் பாடலாம் --- என்ன சுகம்

5. வாட்டம் பசி தாகம் பட்டினி சாவில்லை (2)
கேட்டின் மனுடர் வந்து ஊடே யிருப்பதில்லை --- என்ன சுகம்

6. துன்பம் ஒழிந்து மீட்பு இன்பமடையலாம் (2)
துயரின் சமூகத்தில் கூடி கொண்டாடலாம் --- என்ன சுகம்

7. இயேசுவின் ரத்தத்தால் மீட்பை யடைந்தவர்கள் (2)
ஆசனம் மீதிருந்து ஜெயகீதம் பாடுவார்கள் --- என்ன சுகம்

EN MEETPER UYIRODIRUKKAYILE

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறைவுண்டு ? நீ சொல் , மனமே

சரணங்கள்

1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர் ,
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் ;
விண்ணுல குயர்ந்தோர் , உன்னதஞ்சிறந்தோர் ,
மித்திரனே சுகபத்திர மருளும் --- என் மீட்பர்

2. பாபமோ , மரணமோ , நரகமோ ,பேயோ ,
பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர் ,
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன் ;
சஞ்சலமினியேன் ? நெஞ்சமே , மகிழாய் --- என் மீட்பர்

3. ஆசி செய்திடுவார் , அருள்மிக அளிப்பார் ,
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார் ;
மோசமே மறைப்பார் , முன்னமே நடப்பார் ;
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் --- என் மீட்பர்

4. கவலைகள் தீர்ப்பார் , கண்ணீர் துடைப்பார் ,
கடைசிமட்டுங் கைவிடா திருப்பார் ;
பவமனிப்பளிப்பார் , பாக்கியங் கொடுப்பார் ,
பரம பதவியினுள் என்றனை எடுப்பார் --- என் மீட்பர்

5. போனது போகட்டும் , புவிவசை பேசட்டும் ,
பொல்லான் அம்புக ளெய்திடட்டும் ,
ஆனது ஆகட்டும் , அருள்மழை பெய்திடும் ,
அன்புமிகும் பேரின்ப மெனக்கருள் --- என் மீட்பர்

EN MEETPER RATHAM SINTHINAR

1. என் மீட்பர் ரத்தம் சிந்தினார்,
மா நீதியும் சம்பாதித்தார்;
என் சொந்த நீதி வெறுத்தேன்,
இயேசுவின் நாமம் நம்புவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.

2. கார் மேகம் அவர் முகத்தை
மறைக்கும் காலம், அவரை
எப்போதும்போல நம்புவேன்,
மாறாதவர் என்றறிவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.

3. மரண வெள்ளம் பொங்கினும்,
என் மாம்சம் சோர்ந்து போயினும்,
உன் வாக்குத்தத்தம் ஆணையும்
என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்;
நன் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.

4. நியாயத்தீர்ப்புக் காலத்தில்
எக்காள சத்தம் கேட்கையில்,
அஞ்சேன் என் மீட்பர் நீதியே
அநீதன் என்னை மூடுமே;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.

ENNA EN AANANTHAM ENNA EN AANANTHAM

என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !
இயம்பலாகாதே ,
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே.

சரணங்கள்

1. கூடுவோம் , ஆடுவோம் , பாடுவோம் , நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம் ;
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்.

2. பாவங்கள் , சாபங்கள் , கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே ;
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே.

3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு ,
அருளினதாலே ,
நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
பகர வேண்டியதே.

4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே ,
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனைத் தோத்தரிப்போம்.