Monday, June 15, 2015

ATHIMARAM THULIRVIDAAMEL PONAALUM அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
  அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களி கூருவேன்

1.ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்

2.மந்தையிலே ஆடுகளின்றிப்போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்

3.எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்

4.உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும

ATHISAYAMAANA OOLIMAYA NAADAAM அதிசயமான ஒளிமய நாடாம்

அதிசயமான ஒளிமய நாடாம்
  அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் - நான் வாஞ்சிக்கும் நாடாம்

1. பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு - 2
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா - அல்லேலூயா

2. சந்திர சூரியன் இல்லை ஆனால்
இருள் ஏதும் காணவில்லை - 2
தேவகுமாரன் ஜோதியில் ஜோதி
நித்திய வெளிச்சமவர் - என்றும் பகல்

3. விதவிதக் கொள்கையில்லை
பலப்பிரிவுள்ள பலகை இல்லை - 2
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்புமயம் - அன்புள்ளோர் செல்லும்

4. பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை - 2
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை - அன்பே மொழி

5. பல பல திட்டம் இல்லை
ஆளும் சட்டங்கள் ஏதும் இல்லை - 2
காவல்துறையில்லை கண்டிப்பும் இல்லை
மனிதனின் ஆட்சியில்லை - பேரானந்தமே

6. கடைத்தெரு ஏதும் இல்லை
தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை - 2
தரித்திரர் செல்வர் சிறியவர் பெரியோர்
ஆகிய சிறப்பும் இல்லை - எல்லாம் சமம்

7. இயேசுவின் இரத்ததினால்
பாவம் கழுவினால் செல்லலாமே - 2
இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்ப+மியில் எவரும் வேண்டாம் - இன்றே வாரீர்

ATHIKAALAYIL BAALANAI THEDI அதிகாலையில் பாலனைத் தேடி

அதிகாலையில் பாலனைத் தேடி
  அதிகாலையில் பாலனைத் தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி,
தெய்வ பாலனைப் பணிந்திட வாரீர்…
அதிகாலையில் பாலனைத் தேடி…
வாரீர்… வாரீர்… வாரீர்…
நாம் செல்வோம்

1. அன்னை மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட,
விரைவாக நாம் செல்வோம் கேட்க…
- அதிகாலையில்

2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே
உன் சிந்தை குளிர்ந்திட போற்று
நல் காட்சியை கண்டிட நாமே…
- அதிகாலையில்

ATHIKAALAI STHOTHIRA BALI

அதிகாலை ஸ்தோத்திர பலி
  அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான்
ஆராதனை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான் - 2

1. எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவி செய்தீர்
இதுவரை உதவி செய்தீர்
எபிநேசர் எபிநேசர்

2. பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக ராஜாவே
பரலோக ராஜாவே
பரிசுத்தர் பரிசுத்தர்

3. எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே
எல்லாம் வல்லவரே
எல்ஷடாய் எல்ஷடாய்

4. எல்ரோயி எல்ரோயி
என்னை காண்பவரே
என்னை காண்பவரே
எல்ரோயி எல்ரோயி

5. யேகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யேகோவா யீரே

6. அதிசய தெய்வமே
ஆலோசனை கர்த்தரே
ஆலோசனை கர்த்தரே
அதிசய தெய்வமே

7. யேகோவா ஷம்மா
எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே
யேகோவா ஷம்மா

8. யேகோவா ஷாலோம்
சாமாதானம் தருகிறீர்
சாமாதானம் தருகிறீர்
யேகோவா ஷாலோம்

9. யேகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர்
எந்நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே

10. யேகோவா ரஃப்பா
சுகம் தரும் தெய்வம்
சுகம் தரும் தெய்வம்
யேகோவா ரஃப்பா

ATHIKAALAI NERAM அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)

அதிகாலை நேரம்
  அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்

1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா

2. பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே

3. நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே

4. நலன்தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே

5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா

6. விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே

ANBODU EMMAI POOSHIKKUM அன்போடு எம்மைப் போஷிக்கும்

அன்போடு எம்மைப் போஷிக்கும்

1. அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே;
முன்னோரையும் நடத்தினீர்
கஷ்ட இவ்வாழ்விலே.

2. கிருபாசனமுன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும்;
தலைமுறையாய்த் தேவரீர்
எம் தெய்வமாயிரும்.

3. மயங்கும் ஜீவ பாதையில்
மெய்ப் பாதை காட்டிடும்;
அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும்.

4. இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
பிதாவின் வீட்டினில்
சேர்ந்திளைப்பாறுமளவும்
காப்பீர் உம் மறைவில்.

5. இவ்வாறான பேர் நன்மைக்காய்
பணிந்து கெஞ்சினோம்;
நீர்தாம் எம் தெய்வம் என்றுமே,
சுதந்தரமுமாம்.

ANBURUVAAM YEM AANDAVA LYRICS


1. அன்புருவாம் எம் ஆண்டவா,
எம் ஜெபம் கேளும், நாயகா;
நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும்
பாங்குடன் கட்ட அருளும்.

2. வாலிபத்தில் உம் நுகமே
வாய்மை வலுவாய் ஏற்றுமே,
வாழ்க்கை நெறியாம் சத்தியம்
நாட்ட அருள்வீர் நித்தியம்.

3. அல்லும் பகலும் ஆசையே
அடக்கி ஆண்டு, உமக்கே;
படைக்க எம்மைப் பக்தியாய்
பழுதேயற்ற பலியாய்.

4. சுய திருப்தி நாடாதே,
உம் தீர்ப்பை முற்றும் நாடவே;
வேண்டாம் பிறர் பயம் தயை,
வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை.

5. திடனற்றோரைத் தாங்கிட,
துக்கிப்பவரை ஆற்றிட;
வாக்கால் மனத்தால் யாரையும்
வருத்தா பலம் ஈந்திடும்.

6. எளிதாம் வாழ்க்கை ஏங்கிட,
தீங்கற்ற இன்பம் தேடிட,
மன்னிக்க முற்றும் தீமையை
நேசிக்க மனு ஜாதியை.

ALLELUJAH AAA MAANTHARE அல்லேலூயா! ஆ மாந்தரே

அல்லேலூயா! ஆ மாந்தரே

1. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே, நாம் பாடுவோம்,
இந்நாளில் சாவை வென்றோராம்
விண் மாட்சி வேந்தர் போற்றுவோம்.
அல்லேலூயா!

2. அஞ்ஞாயிறு அதிகாலை
நல் மாதர் மூவர் கல்லறை
சென்றாரே காண தேகத்தை.

3. அம்மூவர் பார்த்தார் தூதன் தான்;
வெண் ஆடை தூதன் சொல்லுவான்:
நாதர் கலிலேயா செல்வார்.

4. பயந்த சீஷர் ராவிலே
கண்டார் கேட்டார் தம் நாதரே!
என் சமாதானம், தாசரே!

5. உயிர்த்த நாதர் கண்டோமே
என்றோரைத் தோமா கேட்டானே;
நம்பான், சந்தேகங்கொண்டானே.

6. வா, தோமா, என் விலாவைப் பார்,
இதோ, என் கைகள் கால்கள் பார்;
நம்பு, சந்தேகம் தீர் என்பார்.

7. தோமா சந்தேகம் தீர்ந்தனன்;
விலா, கை, கால்கள் நோக்கினன்;
என் நாதா! ஸ்வாமி! என்றனன்.

8. காணாமல் நம்பின் பாக்கியர்;
மாறா விஸ்வாசம் வைப்பவர்
மா நித்திய ஜீவன் பெறுவர்.

9. மா தூயதாம் இந்நாளில் நாம்
நம் பாடல் ஸ்தோத்ரம் படைப்போம்;
பரனைப் போற்றி மகிழ்வோம்.
அல்லேலூயா!

ARULIN OOLIYAI KANDAAR அருளின் ஒளியைக் கண்டார்

அருளின் ஒளியைக் கண்டார்

1. அருளின் ஒளியைக் கண்டார்
இருளின் மாந்தரே;
மருள் மரண மாந்தரில்
திரு ஒளி வீச.

2. ஜாதிகளைத் திரளாக்கி
நீதி மகிழ்ச்சியால்
கோதில் அறுப்பில் மகிழ
ஜோதியாய்த் தோன்றினார்.

3. கர்த்தன், பிறந்த பாலகன்,
கர்த்தத்துவமுள்ளோன்;
சுத்த அவரின் நாமமே
மெத்த அதிசயம்.

4. ஆலோசனையின் கர்த்தனே,
சாலவே வல்லோனே,
பூலோக சமாதானமே,
மேலோக தந்தையே.

5. தாவீதின் சிங்காசனத்தை
மேவி நிலைகொள்ள
கூவி நியாயம் நீதியால்
ஏவி பலம் செய்வார்.

AMAITHI ANBIN SWAMIYE LYRICS

அமைதி அன்பின் ஸ்வாமியே
1. அமைதி அன்பின் ஸ்வாமியே,
இப்பாரில் யுத்தம் மூண்டதே;
விரோதம் மூர்க்கம் ஓய்த்திடும்,
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

2. எம் முன்னோர் காலம் தேவரீர்
செய்த மா கிரியை நினைப்பீர்;
எம் பாவம் நினையாதேயும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

3. நீர்தாம் சகாயம் நம்பிக்கை;
கடைப்பிடிப்போம் உம் வாக்கை;
வீண் ஆகாதே யார் வேண்டலும்;
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

4. விண் தூதர் தூயோர் அன்பினில்
இசைந்தே வாழும் மோட்சத்தில்
உம் அடியாரைச் சேர்த்திடும்;
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

ATHO OOR JEEVA VAASALE

அதோ! ஓர் ஜீவ வாசலே!

1. அதோ! ஓர் ஜீவ வாசலே!
அவ்வாசலில் ஓர் ஜோதி
எப்போதும் வீசுகின்றதே,
மங்காத அருள்ஜோதி.

ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!
அவ்வாசல் திறவுண்டதே!
பாரேன்! பாரேன்!
பார்! திறவுண்டதே.

2. அவ்வாசலுள் பிரவேசிப்போர்
கண்டடைவார் மெய்வாழ்வும்
கீழோர், மேலோர்,இல்லோர்,உள்ளோர்,
எத்தேச ஜாதியாரும்.

3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம்,
அவ்வாசலில் உட்செல்வோம்;
எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்,
கர்த்தாவைத் துதிசெய்வோம்.

ANANTHA KOODI KOOTATHAR LYRICS

அநந்த கோடி கூட்டத்தார்

1. அநந்த கோடி கூட்டத்தார்
ஆனந்த கீதம் பாடியே,
பண் இசைப்பார் வெண் உடையார்
தெய்வாசனம் முன்னே.
விண்வேந்தர் தயை போக்கிற்றே
மண் மாந்தர் பாவம் நோவுமே;
மேலோகிலே நீர் நோக்குவீர்
உம் நாதர் மாட்சியே.
பாடற்ற பக்தர் சேனையே,
கேடோய்ந்து தூதரோடுமே
பண் மீட்டுவீர்; விண் நாதர்தாம்
தம் வார்த்தை நல்குவார்.

2. மா தாழ்வாய் வாழ்ந்தீர் பாரினில்,
கோதற்ற வெண்மை அணிந்தீர்;
உம் நீதிக்காய் நம் நாதரே
பொற் கிரீடம் சூட்டுவார்;
பூலோக வாழ்வின் கண்ணீரை
மேலோகில் ஸ்வாமி நீக்கினார்;
போம் திகிலும்; உம் மீட்பரின்
நல் மார்பில் சாய்குசீர்
விண் வீட்டினில் மா பந்தியை
மாண் வேந்தரோடு அடைந்தீர்;
நீர் பெற்றீரே பேர் வாழ்வுமே
கர்த்தாவோடென்றுமே.

3. ஆ, வீரர் சூரர் சேனையே,
மா தீரச் செய்கை ஆற்றினீர்,
நீர் சகித்தீர், நீர் ஜெயித்தீர்
நீர் வாழ்க, பக்தரே!
மண் மாந்தர் கீர்த்தி இகழ்ந்தீர்,
விண் வேந்தரோடும் சிலுவை
நீர் சுமந்தீர், நீர் அறுப்பீர்
உம் கண்ணீர் பலனே.
மெய் மணவாட்டி, போற்றுவாய்!
வையகமே முழங்குவாய்!
எம் ஸ்வாமியே, என்றென்றுமே
உம் ஸ்தோத்ரம் ஏறுமே.

AGORA KATTRADITHATHE

அகோர காற்றடித்ததே

1. அகோர காற்றடித்ததே,
ஆ! சீஷர் தத்தளித்தாரே;
நீரோ நல் நித்திரையிலே
அமர்ந்தீர்.

2. மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்!
எழும்பும் என்க, தேவரீர்;
காற்றை அதட்டிப் பேசினீர்
அமரு.

3. அட்சணமே அடங்கிற்றே
காற்று கடல் - சிசு போலே;
அலைகள் கீழ்ப்படிந்ததே
உம் சித்தம்.

4. துக்க சாகர கோஷ்டத்தில்
ஓங்கு துயர் அடைகையில்
பேசுவீர் ஆற உள்ளத்தில்
அமரு.

ANBE VIDAAMAL SERTHUK KONDIR

1. அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்,
பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
ஜீவாறாய்ப் பெருகும்.

2. ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே;
வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்;
நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே;
பேர் ஒளிக் கதிரால் உள்ளம்
மேன்மேலும் ஸ்வாலிக்கும்.

3. பேரின்பம் நோவில் என்னைத் தேடும்!
என் உள்ளம் உந்தன் வீடே என்றும்;
கார் மேகத்திலும் வான ஜோதி!
விடியுங்காலை களிப்பாம்!
உம் வாக்கு மெய் மெய்யே.

4. குருசே! என் வீரம் திடன் நீயே;
உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன்;
வீண் மாயை யாவும் குப்பை நீத்தேன்;
விண் மேனியாய் நித்திய ஜீவன்
வளர்ந்து செழிக்கும்.

ALANGAARA VAASALAALE

அலங்கார வாசலாலே

1. அலங்கார வாசலாலே
கோவிலுக்குள் போகிறேன்;
தெய்வ வீட்டின் நன்மையாலே
ஆத்துமத்தில் பூரிப்பேன்
இங்கே தெய்வ சமூகம்,
மெய் வெளிச்சம், பாக்கியம்.

2. கர்த்தரே, உம்மண்டை வந்த
என்னண்டைக்கு வாருமேன்
நீர் இறங்கும்போதனந்த
இன்பத்தால் மகிழுவேன்.
என்னுட இதயமும்
தெய்வ ஸ்தலமாகவும்.

3. பயத்தில் உம்மண்டை சேர,
என் ஜெபம் புகழ்ச்சியும்
நல்ல பலியாக ஏற
உமதாவியைக் கொடும்.
தேகம் ஆவி யாவையும்
சுத்தமாக்கியருளும்.

4. நல்ல நிலத்தில் விழுந்த
விதை பயிராகுமே
நானும் அவ்வாறே மிகுந்த
கனிகளைத் தரவே
வசனத்தைக் காக்க நீர்
ஈவளிக்கக் கடவீர்.

5. விசுவாசத்தை விடாமல்
அதில் பலப்படவும்
ஒருக்காலும் தவறாமல்
உம்மை நான் பின்செல்லவும்,
மெய்வெளிச்சத்தை நீரே
என்னில் வீசும் கர்த்தரே.

6. சொல்லும், கர்த்தரே, நான் கேட்பேன்
நீர் இப்பாழ் நிலத்திலே
பெய்யப்பண்ணும் மன்னா சேர்ப்பேன்
நல்தியானத்துடனே
தாரும் ஜீவ பானத்தை
தீரும் பசிதாகத்தை.

ALLELUYAA IPPOTHU POOR MUDITHATHE

அல்லேலூயா! இப்போது போர்

1. அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா!
இப்போது போர் முடிந்ததே;
சிறந்த வெற்றி ஆயிற்றே;
கெம்பீர ஸ்துதி செய்வோமே.
அல்லேலூயா!

2. கொடூர சாவை மேற்கொண்டார்;
பாதாள சேனையை வென்றார்;
நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்.
அல்லேலூயா!

3. இந்நாள் எழுந்த வேந்தரே,
என்றைக்கும் அரசாள்வீரே;
களித்து ஆர்ப்பரிப்போமே!
அல்லேலூயா!

4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்
மரித்துயிர்த்திருக்கிறீர்;
சாகாத ஜீவன் அருள்வீர்.
அல்லேலூயா!

ARUL MAARI YENGUMAAGA LYRICS


1. அருள் மாரி எங்குமாக
பெய்ய, அடியேனையும்
கர்த்தரே, நீர் நேசமாக
சந்தித்தாசீர்வதியும்;
என்னையும், என்னையும்
சந்தித்தாசீர்வதியும்.

2. என் பிதாவே, பாவியேனை
கைவிடாமல் நோக்குமேன்;
திக்கில்லா இவ்வேழையேனை
நீர் அணைத்துக் காருமேன்;
என்னையும், என்னையும்
நீர் அணைத்துக் காருமேன்.

3. இயேசுவே, நீர் கைவிடாமல்
என்னைச் சேர்த்து ரட்சியும்;
ரத்தத்தாலே மாசில்லாமல்
சுத்தமாக்கியருளும்;
என்னையும், என்னையும்
சுத்தமாக்கியருளும்.

4. தூய ஆவீ, கைவிடாமல்
என்னை ஆட்கொண்டருளும்;
பாதை காட்டிக் கேடில்லாமல்
என்றும் காத்துத் தேற்றிடும்;
என்னையும், என்னையும்
என்றும் காத்துத் தேற்றிடும்.

5. மாறா சுத்த தெய்வ அன்பும்,
மீட்பர் தூய ரத்தமும்,
தெய்வ ஆவி சக்திதானும்
மாண்பாய்த் தோன்றச்செய்திடும்;
என்னிலும், என்னிலும்
மாண்பாய்த் தோன்றச்செய்திடும்.

ARULNAATHA NAMBI VANTHEN

அருள்நாதா நம்பி வந்தேன்

1. அருள்நாதா நம்பிவந்தேன்,
நோக்கக்கடவீர்.
கைமாறின்றி என்னை முற்றும்
ரக்ஷிப்பீர்.

2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப் பாதத்தில்;
பாவ மன்னிப்பருள்வீர் இந்
நேரத்தில்.

3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்;
சுத்திசெய்வீர் மாசில்லாத
ரத்தத்தால்.

4. துணை வேண்டி நம்பி வந்தேன்,
பாதை காட்டுவீர்;
திருப்தி செய்து நித்தம் நன்மை
நல்குவீர்.

5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்,
ஞானம் பெலனும்;
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்.

6. இயேசு நாதா, நம்பி வந்தேன்,
தவறாமலே
என்னை என்றும் தாங்கி நின்று
காருமே.

ANAATHIYAANA KARTHARE

அநாதியான கர்த்தரே

1. அநாதியான கர்த்தரே,
தெய்வீக ஆசனத்திலே
வானங்களுக்கு மேலாய் நீர்
மகிமையோடிருக்கிறீர்.

2. பிரதான தூதர் உம்முன்னே
தம் முகம் பாதம் மூடியே
சாஷ்டாங்கமாகப் பணிவார்,
'நீர் தூய தூயர்' என்னுவார்.

3. அப்படியானால், தூசியும்
சாம்பலுமான நாங்களும்
எவ்வாறு உம்மை அண்டுவோம்?
எவ்விதமாய் ஆராதிப்போம்?

4. நீரோ உயர்ந்த வானத்தில்,
நாங்களோ தாழ்ந்த பூமியில்
இருப்பதால், வணங்குவோம்,
மா பயத்தோடு சேருவோம்.

ATHIKAALAI YESU VANTHU

அதிகாலை இயேசு வந்து

1. அதிகாலை இயேசு வந்து
கதவண்டை தினம் நின்று
தட்டித் தமக்குத் திறந்து
இடம் தரக் கேட்கிறார்.

2. உம்மை நாங்கள் களிப்பாக
வாழ்த்தி: நேசரே, அன்பாக
எங்களண்டை சேர்வீராக
என்று வேண்டிக்கொள்ளுவோம்.

3. தினம் எங்களை நடத்தி,
சத்துருக்களைத் துரத்தி,
எங்கள் மனதை எழுப்பி,
நல்ல மேய்ப்பராயிரும்.

4. தாழ்ச்சி நாங்கள் அடையாமல்,
நம்பிக்கையில் தளராமல்
நிற்க எங்களுக்கோயாமல்
நல்ல மேய்ச்சல் அருளும்.

5. ஆமேன், கேட்டது கிடைக்கும்
இயேசு இன்றும் என்றென்றைக்கும்
நம்மைக் காப்பார் அவர் கைக்கும்
எல்லாம் ஒப்புவிக்கிறோம்.

ANJATHIRU ENN NENJAME

அஞ்சாதிரு, என் நெஞ்சமே

1. அஞ்சாதிரு, என் நெஞ்சமே,
உன் கர்த்தர் துன்ப நாளிலே
கண்பார்ப்போம் என்கிறார்;
இக்கட்டில் திகையாதிரு,
தகுந்த துணை உனக்கு
தப்பாமல் செய்குவார்.

2. தாவீதும் யோபும் யோசேப்பும்
அநேக நீதிமான்களும்
உன்னிலும் வெகுவாய்
கஸ்தி அடைந்தும், பக்தியில்
வேரூன்றி ஏற்ற வேளையில்
வாழ்ந்தார்கள் பூர்த்தியாய்.

3. கருத்தாய் தெய்வ தயவை
எப்போதும் நம்பும் பிள்ளையை
சகாயர் மறவார்;
மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்
இரக்கமான கரத்தால்
அணைத்து பாலிப்பார்.

4. என் நெஞ்சமே, மகிழ்ந்திரு;
பேய், லோகம்,துன்பம் உனக்கு
பொல்லாப்புச் செய்யாதே;
இம்மானுவேல் உன் கன்மலை,
அவர்மேல் வைத்த நம்பிக்கை
அபத்தம் ஆகாதே.

AGORA KASTHI PATTORAI

அகோர கஸ்தி பட்டோராய்

1. அகோர கஸ்தி பட்டோராய்
வதைந்து வாடி நொந்து,
குரூர ஆணி தைத்தோராய்
தலையைச் சாய்த்துக்கொண்டு,
மரிக்கிறார் மா நிந்தையாய்!
துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்
மரித்த இவர் யாவர்?

2. சமஸ்தமும் மா வடிவாய்
சிஷ்டித்து ஆண்டுவந்த,
எக்காலமும் விடாமையாய்
விண்ணோரால் துதிபெற்ற
மா தெய்வ மைந்தன் இவரோ?
இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ
பிதாவின் திவ்விய மைந்தன்?

3. அநாதி ஜோதி நரனாய்
பூலோகத்தில் ஜென்மித்து,
அரூபி ரூபி தயவாய்
என் கோலத்தை எடுத்து,
மெய்யான பலியாய் மாண்டார்
நிறைந்த மீட்புண்டாக்கினார்
என் ரட்சகர், என் நாதர்.